×

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் 3 தனிப்படைகள் அமைப்பு

கோவை: கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் பதற்றத்தை தணிக்க பாதுகாப்புக்காக 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை போத்தனூர் கடைவீதியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய மகன் ஆனந்த் (33). இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு காந்திபுரத்தில் இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர்  பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 9 மணியளவில் நஞ்சுண்டாபுரம் நொய்யல் பாலம் அருகே சென்றபோது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் இரும்பு கம்பியால் ஆனந்த் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில், ஆனந்த் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 15 தையல் போடப்பட்டது.
இதை கேள்விப்பட்ட இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.  நள்ளிரவு மேல்சிகிச்சைக்காக ஆனந்த், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல நிலையில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அந்த நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், உமா, முத்தரசு ஆகியோர் மேற்பார்வையில் 300 அதிரடிப்படை போலீசார் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள்  உக்கடம், காந்திபுரம், ஒப்பணக்காரவீதி, கணபதி, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடிக்க ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பிரிவில் உள்ள சிக்னலில் இருந்து போத்தனூர் வரை ரோட்டில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி பைக்கில் வந்த மர்ம நபர்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். செக்போஸ்ட்களில் உள்ள கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் நாளை கடையடைப்பு
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:- குடியுரிமை சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவாக இந்து முன்னணி அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தி வருகிறது. இப்போராட்டத்தை இன்று (நேற்று) மாலை முதல் நாங்கள் விலக்கிக் கொள்கிறோம். இந்நிலையில் சிஏஏ ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று நேற்று வீடு திரும்பிய கோவை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த், பயங்கரவாதிகளால் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளார். இதேபோல் தாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இதை கண்டித்தும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் கோவை மாவட்டம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். காவல்துறையினர் திறம்பட செயல்பட்டு அவர்களை கைது செய்ய வேண்டும். அமைதியைத்தான் நாங்கள் விரும்புகிறோம். கோவையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் டி.ஜி.பி.க்கள் கோவையில் முகாம்

இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் தாக்கப்பட்டதையடுத்து கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க தமிழ்நாடு காவல் துறை கூடுதல் டி.ஜி.பி.க்கள் ஜெயந்த் முரளி, சங்கர் ஜிவால் ஆகியோர் நேற்று கோவை வந்தனர். பின்னர் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் சுமித் சரணிடம் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் கோவையில் முகாமிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் குவிப்பால் பதற்றமான சூழல் நிலவுகிறது.


Tags : Attack ,frontman , Attack on Hindu frontman 3 Personnel system
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது